Description
“தமிழ்நாடு வரலாறும் பண்பாடும்” என்ற பெருந்தலைப்பில் “நவீன காலம்”, “தற்காலம்” என்ற தொகுதிகளில் இந்நூல் வெளியாகியுள்ளது. பேராசிரியர் க.வெங்கடேசன் அவர்களின் படிப்படியான விளக்கத்தில் இந்த இரண்டு நூல்களும் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களை தட்டி எழுப்பி தோள் கொடுக்கின்றது என்று சொன்னால் அது மிகையன்று. குறிப்பாக தமிழ்நாட்டு வரலாற்றை தற்காலம் வரையில் விளக்கும் தொகுதியில் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் மாண்பு மிகு திரு ஸ்டாலின் ஆட்சி வரை விளக்கப்பட்டுள்ளது இவ்வெளியீட்டின் மணிமகுடம் என்று சொல்லலாம். தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் “நவீன காலம்” என்ற தலைப்பில் விளக்கும் தொகுதி “ஐரோப்பியர் வருகை முதல் நீதிக்கட்சி ஆட்சி வரை” நீண்டு செல்கின்றது. அதாவது இத்தொகுதியில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை, (1) நவீன காலத் தமிழ்நாட்டு வரலாறு, (2) நவீனகாலப் போர்கள் – தமிழ்நாட்டில் ஆதிக்கப் போட்டி மற்றும் (3) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகம். இந்த முப்பகுதிகளிலும் தமிழ்நாட்டின் நவீனகாலம், சென்னையில் ஆங்கியலேயர், பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரர், கர்நாடகத்தில் நவாபுகள், கர்நாடக போர்கள், ஆங்கிலேயரின் வெற்றிக்கான காரணங்கள், தமிழ்நாடும் மைசூர் போர்களும், ஆங்கியலேயரும் ஆர்க்காட்டு நவாபுகளும், பாளையக்காரர் கிளர்ச்சி, தென்னிந்திய கிளர்ச்சி, வேலூர் கிளர்ச்சி, கம்பெனி தமிழ்நாட்டைக் கைப்பற்றுதல் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் ஆசிரியர் வெங்கடேசன் அணுகியுள்ளது சிறப்பு. மேலும் சமூக சீர்திருத்த இயக்கங்கள், வள்ளலாரின் சீர்திருத்த இயக்கம், இந்து சமய சீர்திருத்த இயக்கம் ஆகியவை பற்றியும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு, நீதிக்கட்சியின் தோற்றம் என விவரிக்கப்பட்டுள்ளது. அது போல “தற்காலம்” என்ற தலைப்பில் விளக்கும் தொகுதி “சி.ராஜகோபாலாச்சாரி ஆட்சி தொடங்கி மு.க.ஸ்டாலின் ஆட்சி (2021 – )” என தற்கால ஆட்சியை கட்டுரைகளாக படம் பிடித்து காட்டுகின்றது. இது பின்வரும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. (1) தற்காலத் தமிழ்நாட்டின் வரலாறு (2) சமகால தமிழ்நாட்டு ஆட்சி முறை தற்கால தமிழ்நாட்டின் வரலாறு என்ற முதற் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த சி.ராஜகோபாலாச்சாரியின் ஆட்சிக்காலம் தொடங்கி, இந்தியா அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற போது சென்னை ராஜதானியின் முதலமைச்சராக பதவியேற்ற ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக பதவி வகித்த பி.எஸ்.குமாரசாமி ராஜா, சி.ராஜகோபாலாச்சாரி, கு.காமராசர், எம்.பக்தவச்சலம், சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன், வி.என்.ஜானகி, ஜெ.ஜெயலலிதா,ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சராக பதவி வகித்து வரும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் ஆட்சிகாலங்களில் நிகழ்த்திய சாதனைகள், கொண்டு வந்த முக்கியத் திட்டங்கள், சந்தித்த சோதனைகள், எதிர்கொண்ட இடர்பாடுகள் – சவால்கள், அவற்றிற்கு அவர்கள் கண்டா தீர்வுகளோடு அவரவர் ஆட்சிக்காலத்தில் தமிழக அரசியலில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளும் இத்தொகுதியில் நீண்ட நெடிய கட்டுரைகளாக இடம்பெறுகின்றன. இரண்டாம் பகுதியில் சமகால தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பஞ்சாயத்து ஆட்சி, சமூக நீதி, கல்வி வளர்ச்சி, கலை மற்றும் கலாச்சாரம் என பல்வேறு தலைப்புகளிலான செய்திகளையும் காணலாம். புதிய பாடத்திட்டத்தை ஒட்டி இந்த இரண்டு தொகுதிகளும் சீர் செய்யப்பட்டு, தமிழ்நாட்டின் வரலாற்றை அண்மைக்காலம் வரை அழகாக விளக்கும் இந்நூல்கள் மைய ஆட்சிப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் ஓர் வரப்பிரசாதம் என்றால் அது மிகையன்று.
Reviews
There are no reviews yet.